ஐபிஎல் 2026 மற்றும் சமீபத்திய அண்டர்-19 உலகக்கோப்பை தொடர்களில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் வியக்க வைத்த இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு புதிய சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். மைதானத்தில் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட இந்த 14 வயது இளம் வீரர், பிப்ரவரி 17 முதல் தொடங்கவுள்ள சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளார்.
மேலும் பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள போடர் சர்வதேச பள்ளியில் தேர்வு எழுதவுள்ள இவருக்குத் தற்போது ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களையே மிரட்டிய சூர்யவன்ஷிக்கு, இந்தப் பொதுத்தேர்வு ஒரு ‘அக்னி பரீட்சை’யாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கிரிக்கெட் மைதானத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், தேர்வு அறையில் வைபவ் ஒரு சாதாரண மாணவராகவே கருதப்படுவார் என பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அவருக்கு எவ்வித சிறப்பு சலுகைகளோ அல்லது விஐபி மரியாதையோ வழங்கப்படாது என்றும், மற்ற மாணவர்களைப் போலவே அவரும் விதிகளுக்கு உட்பட்டு தேர்வு எழுத வேண்டும் என்றும் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மார்ச் 26 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டையும் சமமாக நிர்வகிப்பது இந்த இளம் வீரருக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகும். மைதானத்தில் காட்டிய அதே வேகத்தையும் திறமையையும் வைபவ் தனது தேர்வுத் தாள்களிலும் காட்டுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
