இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறுகிறது. அந்த வகையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான்மஸ்க் என்பவர் கிரிப்டோ நாணய முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மை கிடையாது இது போன்ற போலியான விளம்பர தகவல்களை ஏஐ மூலமாக எடிட் செய்து வீடியோவாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் 14 போலியான இணையதளங்கள் மற்றும் 26 போலியான இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. எனவே எலான்மஸ்க், கிரிப்டோ கரண்சி முதலீடுகளை ஆதரிப்பதாக வெளிவரும் தகவல்கள் உண்மை இல்லை என்பதால் இதனை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறுவதை நம்ப வேண்டாம் என்றும், தேவை இல்லாத இணையதள முகவரிகள் மற்றும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடிட்டிங் செய்யப்பட்டவையாக இருக்கலாம். எனவே அதனை பின்பற்ற வேண்டாம் என்றும் கூறியுள்ளது. அதோடு மக்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது.

அவ்வாறு மோசடியில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு அழைப்பு செய்து புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் புகார் செய்யலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.