கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள மூடபத்ரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சந்தேஷ் என்பவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்துள்ள சம்பவம் அம்மாநில காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மைசூரு பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டுச் சுவரை ஏறி குதித்து ஆய்வாளர் சந்தேஷ் உள்ளே நுழையும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்தப் பெண்ணுடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வழக்கு தொடர்பாகத் தன்னைச் சந்திக்க வந்த பெண்ணை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆய்வாளர் சந்தேஷ் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மகள் மீதும் தவறான எண்ணத்துடன் அவர் பேசியதாகக் கருதப்படும் ஆடியோ உரையாடல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவல் துறை அதிகாரியே இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மங்களூரு காவல் ஆணையர் சுதீர்குமார் ரெட்டி நடத்திய முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து ஆய்வாளர் சந்தேஷைப் பணி இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் எவ்வித அச்சமும் இன்றித் துணிச்சலுடன் வந்து புகார் அளிக்கலாம் என்றும் அவர்களின் அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
சட்டத்தைக் காக்க வேண்டிய அதிகாரியே குற்றச் செயல்களில் ஈடுபட்டுப் சிக்கியுள்ள இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
