உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது இந்திய அணி.. இதன்மூலம் ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 12வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் கடந்த 2 போட்டிகளில் டெங்குவால் ஆடாத சுப்மன் கில் சேர்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் களமிறங்கி நன்றாகவே தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அந்த தொடக்கத்தை அவர்களால் பெரிய ஸ்கோர் ஆக மாற்ற முடியவில்லை. முகமது சிராஜின் 8வது ஓவரில் அப்துல்லா ஷபீக் 20 ரன்களில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். அதன்பின் ஹர்திக் பாண்டியாவின் 13 வது ஓவரில் இமாம் உல் ஹக் (36 ரன்கள்) அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து இன்னிங்சை சிறப்பாக எடுத்துச் சென்றனர்.. பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

அதன்பின் இந்த ஜோடி 30 ஆவது ஓவரில் பிரிந்தது. முகமது சிராஜின் 29வது ஓவரின் 4வது பந்தில் பாபர் அசாம் (50 ரன்கள்) க்ளீன் போல்ட் ஆனார். பாகிஸ்தான் அணி 29.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்திருந்தது. பின் பாகிஸ்தான் அணி சரிவை கண்டது.. தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர். அதாவது, சவுத் ஷகீல் 6, இப்திகார் அகமது 4 மற்றும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் (49 ரன்கள்) ஷதாப் கான் 2, முகமது நவாஸ் 4, ஹசன் அலி 12, ஹாரிஸ் ரவூப் 2  என அனைவருமே அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டனர். பாகிஸ்தான் அணி கடைசி 36 ரன்களுக்கு மட்டும் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீவ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கி இலக்கை துரத்தினர். கில் தொடக்கத்திலேயே அதிரடியாக 4 பவுண்டரிகளை விளாசினார். பின் ஷஹின் அப்ரிடியின் 3வது ஓவரில் சுப்மன் கில் 16 ரன்கள் எடுத்த நிலையில், ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து ரோஹித் சர்மா – விராட் கோலி இருவரும் கைகோர்த்து ஆடிய ஆடிய நிலையில் ரோஹித் சர்மா அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு கொண்டிருந்தார்.

குறிப்பாக ஹாரிஸ் ரவூப்பின் ஓவரில் ஹிட்மேன் ரோஹித் அசால்ட்டாக சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பின் ஹசன் அலியின் 10-வது ஓவரில் விராட் கோலி 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி 9.5 ஓவரில் 79 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது. இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் களத்திற்கு வர, ரோகித்  36 பந்துகளில் அதிரடியாக அரை சதமடித்தார். தொடர்ந்து இருவரும் சிறப்பாக ஆடி வெற்றியை நெருங்கினர்.  கேப்டன் ரோஹித் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஷஹீன் அப்ரிடியின் 22வது ஓவரில் இப்திகார் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.

ரோஹித் அதிரடியாக 63 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 86 ரன்கள் எடுத்தார். பின் கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் பொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தனர். ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்களுடனும், கே.எல் ராகுல் 19 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஒருநாள் உலக கோப்பையில் அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி :

இதனால் ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை அப்படியே தக்க வைத்துள்ளது.  உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி தொடர்கிறது.

1992- இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1996- இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1999- இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2003- இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2011- இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2015- இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2019- இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2023 – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா (து.கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.

பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கே), ஷதாப் கான் (து.கே), இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி,