2023 ஐசிசி உலக கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வென்ற பிறகு, விராட் கோலியிடம் இருந்து கையெழுத்திட்ட ஜெர்சியை பாபர் அசாம் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2023 ஐசிசி உலக கோப்பையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபீக் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீவ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 30.3 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா (86) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (53*) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மேலும் கே.எல் ராகுல் 19* ரன்களும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களும் எடுத்தனர்.. பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. மேலும் இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய அணி (8-0).

இந்திய அணி வெற்றிபெற்ற பின் மைதானத்தில் இருந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல இந்திய வீரர்களும் வெற்றியைக் கொண்டாடினர். இந்நிலையில் ​​​​தோல்விக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் மகிழ்ச்சியாக பேசினார். அதோடு கோலியிடம் கையெழுத்திட்ட ஜெர்சியைக் கேட்ட்டார். கோலி பாபரின் கோரிக்கைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், மேலும் அதில் கையெழுத்திட்ட பிறகு உடனடியாக தனது ஜெர்சியை அவருக்கு வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

இது போன்ற சம்பவம் நடைபெறுவது முதல் முறை அல்ல.. இதற்கு முன் பாகிஸ்தான் வீரர்கள் உட்பட அனைத்து அணி வீரர்களுக்கும் இதுபோல கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார் கோலி.. முன்னதாக ஆசிய கோப்பையின் போது கூட பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி வீரர்கள் நட்பாக பேசி பழகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களான முகமது ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களிடம் சிரித்து ஜாலியாக பேசி வருகின்றனர்..

நடந்து முடிந்த 2023 ஆசிய கோப்பை போட்டியில் கூட தந்தையான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி பரிசு கொடுத்தது குறிப்பிடத்தக்கது..