உலகக்கோப்பை 5வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி..

2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று 5வது போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதேசமயம் இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இந்த போட்டியில் இடம் பெறவில்லை. எனவே அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக களம் இறங்குவார் என ரோகித் சர்மா தெரிவித்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். இதில் முதல் 2 ஓவர்களில் எச்சரிக்கையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு, 3வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். பும்ராவின் 2வது பந்து மார்ஷின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி பின்னால் செல்ல, விராட் கோலி பாய்ந்து கேட்ச் பிடித்தார். மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக இன்னிங்சை தொடங்கினர். ஸ்பின்னர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்த ஜோடி பொறுப்பாக ஆடிவந்த நிலையில் டேவிட் வார்னர் (41 ரன்கள்) குல்தீப் யாதவின் 17வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து ஸ்மித் மற்றும் லாபுஷாக்னே இருவரும் சேர்ந்து சிறிதுநேரம் ஆடி ரன்களை சேர்த்து வந்து நிலையில், ஸ்மித் (46 ரன்கள்) ஜடேஜாவின் ஓவரில் க்ளீன் போல்ட் ஆனார்.. தொடர்ந்து லாபுஷாக்னேவும் (27 ரன்கள்) ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

இதையடுத்து வந்த வீரர்களும் நிலைக்கவில்லை.. அலெக்ஸ் கேரி 0, மேக்ஸ்வெல் 15, கேமரூன் கிரீன் 8, பாட் கம்மின்ஸ் 15, ஜம்பா 6 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் மிட்செல் ஸ்டார்க் 28 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். முடிவில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரின் 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன்  இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் அடிக்க முயன்று பின்னால் ஸ்லிப்பில் நின்ற கிரீனிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.. தொடர்ந்து ஹேசில்வுட் வீசிய 2வது ஓவரில் ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஆப் சைடு அடிக்க முயன்று வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்திய அணி டாப் 3 பேட்டர்களும் டக் அவுட் ஆக, 2 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 2 ரன் மட்டுமே எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. இதையடுத்து விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் கைகோர்த்தனர். இருவரும் பொறுமையாக ஆட தொடங்கிய நிலையில், ஒரு கண்டத்திலிருந்து தப்பினார் விராட் கோலி. ஆம் ஹேசில்வுட்டின் எட்டாவது ஓவரில் பவுன்சர் பந்தை லெக் சைடு அடிக்க விராட் கோலி முயன்றபோது, அது கேட்ச் ஆக மாற, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஒருபக்கம் ஓடி வர, மறுபுறம் மிட்செல் மார்ஷ் சறுக்கியபடியே கேட்சை கோட்டை விட்டார்.

இதுதான் ஆஸ்திரேலியா செய்த பெரிய தவறு. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் பொறுமையாக தட்டி தட்டி ரன்களை சேர்த்தனர். அவசரப்படாமல் பொறுமையாக ஆடி இருவரும் அரைசதம் கடந்தனர். இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், விராட் கோலி சதத்தை நெருங்கினார். கோலி 48வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹேசில்வுட்டின் 38வது ஓவரில் 4வது பந்தில் ஷாட் அடிக்க முயன்று மிட் விக்கெட் திசையில் லாபுஷாக்னேவிடம் கேட்ச் கொடுத்து துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார். இருப்பினும் விராட் கோலி 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார். பின் ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஜோடி சேர்ந்தனர். பின் 5 ரன் வெற்றிக்கு தேவைப்பட, ராகுல் 42வது ஓவரில் சதத்திற்காக முதலில் ஒரு பவுண்டரி, அடுத்து சிக்ஸர் அடிக்க நினைத்தார். ஆனால் அந்த ஓவரில் 2வது பந்து ஆப் சைடு அவரே ஆச்சரியப்படும் வகையில் சிக்சருக்கு சென்றது. ராகுல் 115 பந்துகளில் 97 ரன்களுடனும், ஹர்திக் 11 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய அணி 41.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் விளையாடும் XI :

ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல்  (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியாவின் விளையாடும் XI :

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.