இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது டீம் இந்தியா. இதில் ஒரு நாள் சர்வதேச  தொடரை இந்தியா 2-1 என்ற கைப்பற்றிய நிலையில், டி20ஐ தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளும் இப்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த டெஸ்ட் தொடர் 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. IND vs SA 1வது டெஸ்ட் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதேபோல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. ஆனால் இந்த முறை இந்திய ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருமா? தென்னாப்பிரிக்க மண்ணில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டி நடைபெறும் 5 நாட்களும் மோசமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது. ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேகமூட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இரு அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களை தங்கள் ஆடும் லெவனில் சேர்க்க ஆர்வமாக உள்ளன. 

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் 12 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட் ஆகியோர் தலைமையில் தான் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா மற்றும் கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்).

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் (வி.கீ).