நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பின் ஆலன் முதல் ஓவரிலேயே ஷமி பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நிக்கோல்ஸ் (2), டேரில் மிட்செல் (1) மற்றும் துவக்க வீரர் டெவான் கான்வே (7), கேப்டன் டாம் லேதம் (1) என அடுத்தடுத்து அவுட் ஆகினர். நியூசிலாந்து அணி 15 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது. இதையடுத்து பிரேஸ்வெல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில், பிரேஸ்வெல் 22 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சான்ட்னர் – பிலிப்ஸ் கைகோர்த்து சிறிது நேரம் ஆடிவந்த நிலையில், சான்ட்னர் 27 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பிலிப்ஸ் 36 ரன்களுடனும், லாக்கி பெர்குசன் 1, டிக்னர் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் , ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்..
இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கி நல்ல துவக்கம் கொடுத்தனர். ரோகித் சர்மா அரைசதம் (51) அடித்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த விராட் கோலி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் இஷான் கிஷன், சுப்மான் கில்லுடன் ஜோடி சேர இருவரும் அணியை வெற்றி பெற வைத்தனர். சுப்மன் கில் 40 ரன்களுடனும், இஷான் கிஷன் 8 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 20.1 ஓவரில் 2விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
Bowlers inspire India's ODI series win against New Zealand in Raipur 💪#INDvNZ | 📝 Scorecard: https://t.co/laPYXU43A1 pic.twitter.com/rmIYa6r0NM
— ICC (@ICC) January 21, 2023