
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த விராட் கோலி 8, இஷான் கிஷன் 5 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.. இருப்பினும் மறுமுனையில் கில் பொறுப்பாக ஆடி அரை சதம் கடந்தார். பின் வந்த சூர்யகுமார் யாதவ் (31), பாண்டியா (28) என முக்கிய வீரர்கள் அவுட் ஆன போதிலும், கில் தனி ஒரு ஆளாக சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அத்துடன் நிற்காமல் தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் லாக்கி பெர்குசன் வீசிய 49 வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 145 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
பின் ஷிப்லி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் இரட்டை சதமடித்த 5ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். மேலும் இப்போட்டியில் சதமடித்த சுப்மன் கில் இன்னிங்ஸ் (19) அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். கில் 149 பந்துகளில் (19 பவுண்டரி, 9 சிக்ஸர்) 208 ரன்கள் விளாசினார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 349 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பெர்குசன், டிக்னர்மற்றும் சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான டெவான் கான்வே 10 ரன்களும், பின் ஆலன் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஹென்றி நிக்கோல்ஸ் 18, டேரி மிட்செல் 9, டாம் லதம் 24, பிலிப்ஸ் 11 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தத்தளித்தது. அப்போது மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் சாண்ட்னர் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி பயமறியாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பிரேஸ்வெல் இந்திய பந்துவீச்சாளர்களை நாலாபுரம் சிதறடித்து அதிர்ச்சி கொடுத்து வெறும் 57 பந்துகளில் சதம் விளாசினார்.
இதையடுத்து 46வது ஓவரில் அரைசதம் அடித்த சாண்ட்னர் 57(45) ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிப்லி டக் அவுட் ஆனார். இருப்பினும் மறுமுனையில் பிரேஸ்வெல் நின்றதால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட 49வது ஓவரை பாண்டியா சிறப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பெர்குசன்(8) விக்கெட்டை எடுத்தார்.. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்தில் பிரேஸ்வெல் சிக்ஸர் அடித்தார்.. அடுத்த பந்து ஒய்டாக வீச, பின் மீண்டும் 2வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் பிரேஸ்வெல் அவுட் ஆனார். பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரி, 10 சிக்சர் அடங்கும்..
இதனால் நியூசிலாந்து அணி 49.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி பந்துவீச்சாளர்களை சற்று பதறவிட்டார் பிரேஸ்வெல். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
2️⃣0️⃣8️⃣ runs
1️⃣4️⃣9️⃣ balls
9️⃣ sixes 🔥A monumental double-century from @ShubmanGill makes him the Player of the Match as #TeamIndia register a 12-run victory in the first #INDvNZ ODI 👏
Scorecard ▶️ https://t.co/DXx5mqRguU @mastercardindia pic.twitter.com/HSCROoJfPi
— BCCI (@BCCI) January 18, 2023
Michael Bracewell's heroic innings goes in vain as India edge the Kiwis in a high-scoring ODI in Hyderabad 🤯#INDvNZ | 📝: https://t.co/raJtMjMaEn pic.twitter.com/S3TU8hLGMr
— ICC (@ICC) January 18, 2023