நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியதால் இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது..

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்த நிலையில், ரோகித் சர்மா 34 ரன்கள் எடுத்தபோது டிக்னர் பந்துவீச்சில் அவுட்  ஆனார். இதையடுத்து வந்த விராட் கோலி 8, இஷான் கிஷன் 5 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.. இருப்பினும் மறுமுனையில் கில் பொறுப்பாக ஆடி அரை சதம் கடந்தார். பின் சூர்யகுமார் யாதவ் – கில் இருவரும் சேர்ந்து நன்றாக ஆடி வந்தனர். பின் சிறப்பாக நன்றாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 31 ரன்களில் அவுட் ஆனார்.

 

இதையடுத்து ஹர்திக் பாண்டியா – கில் இருவரும் ஜோடி சேர, சான்ட்னர் வீசிய 30வது ஓவரில் சதத்தை எட்டினார் சுப்மன் கில். 87 பந்துகளில் கில் 100 ரன்கள் அடித்து அசத்தினார். பின் பாண்டியா 28 ரன்னில் அவுட் ஆன போதிலும், கில்  தொடர்ந்து சிறப்பாக விளையாடி 150 ரன்களை கடந்தார். பின் சுந்தர் 3, ஷரத்துல் தாகூர் 3 என அவுட் ஆகினர். இதையடுத்து குல்தீப் யாதவ் – கில் ஜோடி சேர்ந்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் லாக்கி பெர்குசன் வீசிய 49 வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை பறக்க விட்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

கில் 145 பந்துகளில் 200 ரன்கள் விளாசினார். பின் ஷிப்லி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து கில் வெளியேறினார். இந்த சதத்தின் மூலம் சச்சின், சேவாக், ரோகித் சர்மா, இசான் கிஷன் வரிசையில் தற்போது கில்லும் இணைந்துள்ளார். கில் 149 பந்துகளில் (19 பவுண்டரி, 9 சிக்ஸர்) 208 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 349 ரன்கள் குவித்தது. குல்தீப் 5 ரன்களுடனும், ஷமி 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். நியூசிலாந்து அணியில் ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பெர்குசன், டிக்னர்மற்றும் சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியில் சதமடித்த சுப்மன் கில் இன்னிங்ஸ் (19) அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்தியர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். ஷுப்மான் கில் ஒருநாள் போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடித்துள்ளார்.கில், தனது 19வது இன்னிங்ஸில் 106 ரன்களை எட்டியபோது ஸ்கோரை கடந்தார். கில் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் (24 இன்னிங்ஸ்) ஆகியோரை முந்திச் சென்று, அதிவேக இந்தியராகவும், கூட்டிணைந்த இரண்டாவது அதிவேக சாதனையாளராகவும் ஆனார். அவர் இமான்-உல்-ஹக்கை சமன் செய்து 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்தார், அதே நேரத்தில் 18 இன்னிங்ஸ்களில் வேகமாக 1000 ஒருநாள் ரன்களைக் ஃபகர் ஜமான் கடந்துள்ளார்.