ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் ராய்கர் (35) என்பவர், சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு கால்பந்து மைதானத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும், சாட்சிகள் ஏதும் இல்லாததாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு பெரும் சவால் ஏற்பட்டது.

இதனிடையில், கொலை செய்யப்பட்ட மனோஜின் மனைவி சந்தோஷிக்கு கள்ளக்காதலன் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

சந்தோஷியை விசாரணைக்கு உட்படுத்திய காவல்துறையினர், அவரது கள்ளக்காதலன் ரிஷி ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது நண்பர் மோஹித் சர்மாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தோஷி தனது கணவனை திட்டமிட்டு கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து செயல்பட்டதை ஒப்புக்கொண்டார்.

சிஐடி டிவி சீரியல் மற்றும் சில வெப் தொடர்களைப் பார்த்து கொலைக்கான திட்டத்தை உருவாக்கியதாகவும், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க புதிய சிம் கார்டுகளை பயன்படுத்தியதாகவும் சந்தோஷி தெரிவித்தார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தோஷி, ரிஷி ஸ்ரீவஸ்தவா மற்றும் மோஹித் சர்மா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.