தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடை சீருடைகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பூசாரி, அர்ச்சகர், பட்டாச்சாரியார் போன்ற பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு பருத்தி வேட்டியும், பெண்களுக்கு புடவையும் வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு மற்ற கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்கப்பட இருக்கிறது.

இந்த புத்தாடை வழங்கும் நிகழ்வு ஜனவரி 10-ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் வைத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கிய விவரத்தை அன்றைய தினமே மின்னஞ்சல் முகவரியில் பதிவேற்றம் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.