மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கரும்புக்கு 30 ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது 33 ரூபாய் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மட்டும் தான் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. பாஜக அரசியல் ஆதாயத்திற்காக போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையின்படி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.