நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் குழந்தை திருமணம் அசாமில் மிகவும் அபாய நிலைமையில் உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த நாட்டில் நடைபெறும் குழந்தை திருமணம்  சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகின்ற நிலையில் அசாம் மாநிலத்தில் மட்டும் 12.7 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது.

இது அசாமில் அதிக திருமணங்கள், அதிக குழந்தை இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அறிக்கையை மையமாக வைத்து குழந்தை திருமணங்களை தடுக்க அசாம் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல் மந்திரி ஹமந்த விஸ்வா சர்மா  2026 ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணங்களை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் அசாம் அரசு கடந்த அமைச்சரவை கூட்டத்தில்  முக்கிய முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் 14 முதல் 18 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள்.

அதே போல் 14 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் குழந்தை திருமணம் செய்து வைத்த பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். 14 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ  சட்டமும், 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு குழந்தை திருமணங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

இந்நிலையில் திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேரை  அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் இந்த திருமணத்தை நடத்தி வைத்த மத போதகர்கள் என 2,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே  கைது செய்யப்பட்ட குழந்தை திருமணம் செய்தவர்களை விடுவிக்க கோரி பெண்கள் சிலர் காவல் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.