இந்தியாவுக்குப் பயணம் வந்த வில் ஸ்ட்ரோல்ஸ் (Will Strolls) என்ற ஆஸ்திரேலியப் பயணி, தான் பயணித்த ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்த வயதான ஓட்டுநரின் ஆங்கிலப் புலமை மற்றும் வாழ்க்கை ஞானத்தால் பெரிதும் கவரப்பட்டுள்ளார்.

இந்த ஆட்டோ டிரைவருடன் அவர் உரையாடியதை வீடியோவாகப் பதிவு செய்து பகிர, அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோ டிரைவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட பயணி, அவரிடம் விசாரித்துள்ளார்.

தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று ஆட்டோ டிரைவர் சரியாகக் கணித்ததால், பயணி ஆச்சரியம் அடைந்தார். அப்போது அந்த ஓட்டுநர், தான் ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமையல்காரராகப் (Chef) பணிபுரிந்ததாகக் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by India Flipside (@india_flipside)

பின்னர், “இப்போது நீங்கள் இந்தியாவில் ஏதாவது வணிகம் செய்கிறீர்களா?” என்று பயணி கேட்டபோது, அந்த ஓட்டுநர் கூறிய வார்த்தைகள் இணையவாசிகளைக் கவர்ந்தது:

“நான் ஒரு தொழிலதிபர் அல்ல, நான் மகிழ்ச்சியாக வாழும் மனிதர். நான் பணக்காரர் இல்லை. பணம் வாழ்க்கைக்கு அவசியம், ஆனால் வாழ்க்கை பணத்திற்காக அல்ல.”

இதனைத் தொடர்ந்து, அந்த ஓட்டுநர் பயணிக்காக ஒரு நல்ல தேநீர்க் கடைக்குச் சென்றுள்ளார். அங்குச் சாய்வாலா கூட ஆங்கிலத்தில் பேசி அவர்களை வரவேற்றுள்ளார். இந்த ஆட்டோ டிரைவரின் விவேகம் மற்றும் பணிவு குறித்துப் பலரும் பாராட்டி, “இவர் என் மேலாளரை விட நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்” என்றும், “யாரையும் தோற்றத்தைப் பார்த்து எடை போடக் கூடாது” என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.