சென்னையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புப் உரையாற்றினார். பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தங்களது அமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது நமது அமைப்பை முழுமையான அரசியலாக மாற்றி, மக்களுக்கான நேரடி அரசியலாகச் செயல்படுத்தப் போகிறோம். சேவை மனப்பான்மையோடு முன்வரும் இளைஞர்களால் மட்டும்தான் அடிமட்ட அரசியலை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும்” என்று அவர் உறுதியளித்தார். மேலும், தங்களது ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு தொடங்கப்பட்ட வெறும் 73 நாட்களுக்குள்ளாகவே, இதுவரை சுமார் 20 லட்சம் தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழகத்தின் எதிர்கால முடிவு எங்கு எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துக் பேசிய அண்ணாமலை, இனி டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் காலம் மலையேறிவிட்டதாகக் கூறினார். “டெல்லி, சென்னை ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் அல்லது பனையூரில் இருந்து மட்டுமே இனி முடிவெடுப்பேன் என்ற பழைய காலம் மாறிவிட்டது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “தவெக ஆட்சியில் ஊழல் குறைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்; ஆனால் உண்மை அதுவல்ல, ஊழல் குறையவில்லை… மாறாக இப்போதுதான் முழுமையாகத் தொடங்கியுள்ளது!” என்று அவர் சாடினார்.
மேலும், “அரசு டெண்டர்களுக்கு அமைச்சர்கள் தற்போதே வெளிப்படையாகப் பணம் வாங்குவதற்குக் கடுமையான ஆதாரங்கள் என்னிடம் ஆடியோ வடிவில் உள்ளன. சில அமைச்சர்கள் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஊழல் செய்யும் நபர்களுக்கு முதலமைச்சர் உடனடியாகக் கடிவாளம் போட வேண்டும். நம்முடைய காலத்தில் ஊழலை ஒழித்தாக வேண்டும்” என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.
மேகதாதுவில் அணை கட்டுவதை கடுமையாக எதிர்ப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, “மேகதாது கட்டுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மத்திய அரசு கூறுவதைக் கேட்கும்போது நெஞ்சு வலிக்கிறது. பிரதமர் மோடி மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு; அவர் நேர்மையான மனிதர். எனவே, இரு மாநில முதல்-அமைச்சர்களையும் ஒன்றாக அமரவைத்து, இப்பிரச்சினைக்கு நியாயமான மற்றும் சுமூகமான தீர்வு காண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் அமித் ஷாவைச் சந்தித்ததால் தன்னை பாஜகவின் ‘பி டீம்’ என்று சிலர் விமர்சிப்பதாகக் கூறிய அண்ணாமலை, “டெல்லியில் உயரிய பொறுப்பை ஏற்று அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றுமாறு அமித் ஷா என்னிடம் கூறினார். ஆனால், நான் அதனை மறுத்துவிட்டு, தமிழ்நாட்டிலேயே தங்கி மக்கள் சேவை செய்து அரசியலில் ஈடுபடப் போவதாக அவரிடமே நேரடியாகத் தெரிவித்துவிட்டேன்” என்று விளக்கமளித்தார்.
