
குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள் இருவரையும் இங்கிலாந்து நாட்டில் குடியேறுவதற்கு தான் உதவி செய்வதாக கூறியுள்ளார். அதோடு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை நம்ப வைத்துள்ளார். இதற்காக அவர்களிடம் ரூ 32 லட்சத்தை கொடுங்கள், இருவரையும் லண்டனுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும், முழு பணமாக இல்லாமல் மாதம் மாதம் பணத்தை எனக்கு டெபாசிட் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இவரது வார்த்தையை நம்பி கடந்த 2022 முதல் 2024 ஜனவரி வரையில் தம்பதிகள் பணத்தை அவருக்கு கொடுத்து வந்துள்ளனர். இதற்காக முதலில் அவர்கள் 6.5 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்த நிலையில் பின்னர் ரூ 3.5 லட்சம் ரொக்கமாக கொடுத்து விசா பற்றிய அசல் ஆவணங்களை வாங்கியுள்ளனர். பின்னர் அந்த நபர் இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்புவதற்கான வேலை தொடர்பாக லண்டன் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின் அந்த தம்பதியினருக்கு எந்த பதிலும் சொல்லாததால் தங்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
அப்போது தான் உண்மை தெரிய வந்தது. அதாவது போலியான ஆவணங்களை கொடுத்து 7.5 லட்சம் ரூபாயை ஏமாற்றியது தெரிய வந்தது. அதோடு அந்த நபர் அவர்களுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.