நடிகர் விஜய்தான் ‘சூப்பர் ஸ்டார்’ என்று ‘வாரிசு’ பட விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதுப் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தான் ஏன் அவ்வாறுப் பேசினேன் என்று அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தான் பேசியது ‘சாதாரணம்’ தான் என்றும், அது தனது மனதில் பட்ட உண்மை என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.
யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “சூப்பர் ஸ்டார் என்று நான் சும்மா சொல்லவில்லை. இருக்கும் உண்மையைத்தான் சொன்னேன். யார் என்ன நினைத்தாலும், இணையத்தில் ட்ரோல் செய்தாலும், எனக்குக் கவலை இல்லை. நான் கமெண்ட் செக்ஷனுக்குப் போவதே இல்லை” என்றுத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது ஆரம்பக் காலத்தில் தனக்கு உதவிய நடிகர் விஜயகாந்த் குறித்தும் அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியுடன்ப் பேசினார். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் போது தனக்கு விபத்து ஏற்பட்டு ஆறு மாதங்கள் வேலை செய்ய முடியாமல் இருந்ததாகவும், அப்போது விஜயகாந்த் வேறு ஒரு நடிகரை வைத்துப் படத்தைத் தொடராமல், சரத்குமாருக்காகப் படப்பிடிப்பை 6 மாதங்கள் தள்ளி வைத்ததாகவும் சரத்குமார் நினைவு கூர்ந்தார்.
மேலும், விஜயகாந்த் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களை, “இந்தக் கதை சரத்குமாருக்குச் சரியாக இருக்கும், அவரிடம் சொல்லுங்கள்” என்றுப் பரிந்துரைப்பார் என்றும், “இன்றைக்கு யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்” என்றும் தனது மரியாதையைப் பதிவு செய்தார்.
தற்போது சரத்குமார், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ‘கொம்புசீவி’ என்றப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
