இந்தியாவைப் பற்றி நிலவும் ஒரே மாதிரியான தவறான கருத்துக்களுக்கு சவால் விடுக்கும் வகையில், ஒரு வெளிநாட்டு பயணி தனது பயண அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. vanboys222 என்ற பயனர், 2.85 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியாவின் இயற்கை அழகு, சுவையான உணவு வகைகள் மற்றும் அன்பான விருந்தோம்பலை புகழ்ந்து பேசியுள்ளார்.

வீடியோவில், அவர் மலைப்பகுதியில் அமைந்த அமைதியான நீர்வீழ்ச்சியின் அருகே நிற்கும்போது, “இந்தியா என்பது அழுக்கு நிறைந்த, அதிக மக்கள் தொகை கொண்ட சேரிகள் மட்டுமல்ல. இங்கே சிறந்த உணவு, அழகான இயற்கை, அன்பான மக்கள் இருக்கிறார்கள். பிலிப்பைன்ஸுக்கு ஈடான விருந்தோம்பல் இங்கும் உள்ளது. இந்தியாவை நேசிக்கிறேன், மீண்டும் வந்து மேலும் பலரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், “இந்தியாவைப் பற்றி நீங்கள் கேட்கும் எதிர்மறை கருத்துகள் உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. இந்த இடத்தைப் பாருங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பலர் நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “இமயமலை முதல் கேரளாவின் அழகிய கடற்கரைகள் வரை, வடகிழக்கு முதல் லடாக், தெற்குப் பகுதிகளின் கலாச்சார பன்முகத்தன்மை வரை இந்தியா எப்போதும் வியக்க வைக்கும்” என்று ஒருவர் எழுதியுள்ளார். மற்றொருவர், “உண்மையான இந்தியாவை உலகுக்கு காட்டியதற்கு நன்றி… தென்னிந்தியாவின் கேரளாவை மறக்காதீர்கள், அது கடவுளின் சொந்த நாடு” என்று பாராட்டியுள்ளார்.

மிசோரம் முதல் கேரளா வரை பல மாநிலங்களிலிருந்து வரும் மக்கள், அவரது திறந்த மனப்பான்மையையும் இந்தியாவின் நல்லதுகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதையும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ, தவறான எண்ணங்களை மாற்றுவதற்கான சிறந்த வழி, நாம் காணும் அழகையும் உண்மையையும் பகிர்வதே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.