புதுடில்லி: விமானப் பயணத்தின் போது சுகாதாரமற்ற, அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை குறைபாட்டிற்கு குற்றவாளி என்று டெல்லி மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பெண் பயணியான பிங்கிக்கு ஏற்பட்ட அசௌகரியம், உடல் வலி மற்றும் மன வேதனைக்கு ₹1.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஜூலை 9ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பாகுவிலிருந்து புது தில்லிக்கு பிங்கி பயணம் செய்தபோது, அவர் சுகாதாரமற்ற மற்றும் கறைபட்ட இருக்கையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக புகார் அளித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விமான நிறுவனம் தனது புகாரை “புறக்கணிப்பு மற்றும் உணர்ச்சியற்ற முறையில்” நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
இண்டிகோ ஏர்லைன்ஸ், அந்தப் பிரச்சினையை அறிந்தவுடன் பிங்கிக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டதாகவும், அதில் அவர் விருப்பத்துடன் பயணத்தை முடித்ததாகவும் விளக்கம் அளித்தது.
ஆனால், வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த மன்றம், “இண்டிகோ சேவை குறைபாட்டிற்கு பொறுப்பாகும்” என்று தீர்மானித்தது. அதன்படி, ₹1.5 லட்சம் இழப்பீடும், கூடுதலாக வழக்குச் செலவாக ₹25,000-ஐ பிங்கிக்கு வழங்குமாறு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு, விமான நிறுவனங்கள் பயணிகளின் வசதிக்கும், சுகாதாரத்துக்கும் முழு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துகிறது.
