கர்நாடக மாநிலம் ஹாசன் டவுன் பென்சன் மொகல்லா பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் அப்தாப், ராஜிக் பாஷா, உம்ரான் ஆகிய 3 பேரும், அந்த இளம்பெண்ணை கடத்தி, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து, மூவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததுடன், அந்த அருவருப்பான செயலின் வீடியோவையும் பதிவு செய்துள்ளனர்.
கொடூரத்தின் உச்சமாக, குற்றவாளிகள் அந்த வீடியோவை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரனுக்கு அனுப்பியுள்ளனர். வீடியோவை பார்த்த அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தாலும், குற்றவாளிகள் அதை உடனடியாக நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், சகோதரன் சம்பவ இடத்துக்கு சென்று தனது தங்கையை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக, இளம்பெண்ணின் சகோதரன் பென்சன் மொகல்லா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கூட்டு பலாத்காரத்துக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. பின்னர், சம்பவம் நடந்த இடத்தையும் போலீசார் பார்வையிட்டு ஆதாரங்களை சேகரித்தனர்.
விசாரணையில், அப்துல் அப்தாப், ராஜிக் பாஷா, உம்ரான் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை என்றும் பொருட்படுத்தாமல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும், அதனை வீடியோ எடுத்து சகோதரனுக்கு அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டது. தற்போது, மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில், பென்சன் மொகல்லா போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொடூர சம்பவம் ஹாசன் நகரில் பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் கிளப்பியுள்ளது.
