நேபாளத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளால் எழுந்த பொதுமக்களின் கோபத்தை அடுத்து, சமூக வலைதளங்களைத் தடை செய்தது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் காத்மாண்டுவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது வன்முறையாக வெடித்தது. காவல்துறையின் தடியடி, கண்ணீர் புகை குண்டு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது.
இந்தக் கொந்தளிப்புக்கு மத்தியில், நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். தற்போது அவர் காத்மாண்டுவில் உள்ள ஷிவ்புரி ராணுவ முகாமில் இருப்பதாகவும், தான் நாட்டை விட்டு தப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சர்மா ஒலி முன்னதாக இந்து கடவுள் ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை, நேபாளத்தில் பிறந்தார் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கருத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தனது பதவி இழப்புக்கு இந்த சர்ச்சையே காரணம் எனவும், இதற்கு பின்னால் இந்தியாவின் திட்டம் இருப்பதாகவும் சர்மா ஒலி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், லிபுலேக், காலாபாணி, லிம்பியாதுரா பகுதிகள் நேபாளத்தைச் சேர்ந்தவை என்றும், சமூக வலைதள நிறுவனங்கள் அரசு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தான் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்ததால் ஆட்சியை இழந்ததாகவும், ஆனால் நாட்டுக்காகவே அனைத்தையும் தியாகம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
