கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது புதன் கான் ஹோஸ்மானி என்பவரின் வினோத வாழ்க்கை முறை இதோ:

10 ஆண்டுகளுக்கு முன்பு காட்டில் குரங்குகள் ஆசையாக இலை தழைகளைத் தின்பதைப் பார்த்த புதன் கானுக்கு, ‘நாமும் ஏன் இதைச் சாப்பிடக்கூடாது?’ என்ற எண்ணம் தோன்றியுள்ளது. மெல்ல மெல்ல சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளைத் தவிர்த்து இலைகளைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார்.

தற்போது அவர் வசிக்கும் மலைப் பகுதியில் கிடைக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட மூலிகை இலைகளையே தனது உணவாகக் கொண்டுள்ளார். ஒரு நாளைக்கு 6 முறை இலைகளை மட்டுமே சாப்பிடுகிறார். எப்போதாவது ஊருக்குள் வந்தால் மட்டும் ஒரு கப் டீ குடிப்பாராம்.

புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகள் இல்லாமல், வெறும் இலையைச் சாப்பிட்டும் கடந்த 10 ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூட உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.