இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் நிலைமை குறித்து வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு, ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைப்பட வைத்துள்ளது. இளங்கலை பட்டம் முடித்த சுமார் 73 சதவீத மாணவர்கள், தங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் கிடைக்கும் என்று மலைபோல் நம்பிக் காத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனத்தில் வெறும் 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அந்த அளவிலான சம்பளம் கிடைப்பதாக அந்த அறிக்கை கசப்பான உண்மையை உடைத்துள்ளது. இந்த மிகப்பெரிய இடைவெளி, கனவுகளுடன் வெளியே வரும் இளைஞர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த சுமார் 90 சதவீத ஃப்ரெஷர்கள், “எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும்” என்று குறைந்த வருமானத்தில் வேலை செய்யத் தயாராகிவிட்டனர். இதற்கு முக்கியக் காரணமாக ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிறுவனங்கள் இப்போது மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ மூலம் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டதால், ஆரம்பக் கட்ட வேலை வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன.
முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில் ஆட்களை எடுத்த ஐடி நிறுவனங்கள், இப்போது மிகக் கடினமான தேர்வு முறையைப் பின்பற்றித் திறமையானவர்களை மட்டுமே வடிகட்டுகின்றன. வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது, கூடுதல் திறன்கள் இருந்தால் மட்டுமே வேலை என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
