உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா (30) என்ற இளைஞர், தன் மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததால், மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கட் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா, தன் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு, செவ்வாய்க்கிழமை காலை அங்கு வந்த காவல்துறையினர், உடலைக் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ராகுலின் தாய் அளித்த புகாரின் பேரில், அவரது மனைவி, கள்ளக்காதலன் சுபம் சிங் மற்றும் மாமியார் ஆகிய மூவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின்போது, ராகுலின் அலைபேசியில் இருந்து, அவர் தற்கொலை செய்வதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட 7 நிமிடம் 29 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
அந்த வீடியோவில், தன் மனைவி தன்னை ஏமாற்றுவதாகவும், குழந்தையைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் ராகுல் வேதனையுடன் பேசியுள்ளார். “நான் சாக விரும்பவில்லை, ஆனால் வாழ ஒரு காரணம் இல்லை” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், “என் மனைவி, டேஞ்சர் என்ற புனைபெயர் கொண்ட சுபம் சிங்குடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்.
நான் பலமுறை தடுத்தும் அவர் கேட்கவில்லை. என் மாமியார் அவரைத் தூண்டிவிட்டு, என் அலைபேசி எண்ணைக்கூடத் தடை செய்ய வைத்தார். எனக்கு என் மனைவியையும் குழந்தையையும் மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த பிரிவைத் தாங்க முடியவில்லை” என்று ராகுல் கூறியுள்ளார். மேலும், ராகுல் அதிகக் கடன் சுமையில் இருந்ததாகவும், வேலை செய்யும் இடத்திலும் அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன் மனைவி தன் மீது பொய்ப் புகார்களைப் பதிவு செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “2014ஆம் ஆண்டு முதல் ஆண்களின் குரல்கள் எங்கும் கேட்கப்படவில்லை. பெண்கள் எப்போதும் சரியானவர்கள் அல்ல. இந்திய தண்டனைச் சட்டத்தின் 498ஏ பிரிவைத் திருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று தனது இறுதி வீடியோவில் ராகுல் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராகுலும், அவரது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர் அந்த வீடியோவைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
