
சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ் (42) என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் இரு சக்கர வாகனம் ஆவடியில் மீட்கப்பட்ட நிலையில் புகார் கொடுத்த இளம் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புகார் கொடுத்த இளம் பெண்ணை காவலர் ஹரிதாஸ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது “இருசக்கர வாகனத்தை மீட்டுக் கொடுத்ததற்காக கொஞ்சம் கவனியுங்கள்” என்று கூறினார்.
அதற்கு இளம்பெண் கவனியுங்கள் என்றால்? என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டதற்கு காவலர் ஹரிதாஸ் ரூ. 15 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார்.
ஹரிதாஸ் “பணம் தேவையில்லை… லாட்ஜுக்கு வாருங்கள்…. நம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம்…அது போதும்” என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் இது குறித்து கூறினார்.
இதைத்தொடர்ந்து காவலர் கூறிய லாட்ஜுக்கு சென்ற உறவினர்கள் அங்கு காத்திருந்த ஹரிதாஸை சுற்றி வளைத்தனர். அதன் பின் ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் காவலர் ஹரிதாஸை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்திய நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.