ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் போது, முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே உலுக்கி வருகிறது. “நான் பயப்படவில்லை, கடந்த 47 ஆண்டுகளாகவே நான் பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று அந்த முதியவர் முழங்கிய வார்த்தைகள், அங்குள்ள மக்களின் பல தசாப்த கால விரக்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் அடையாளமாக மாறியுள்ளன.

இந்த வீடியோவை ஈரானிய பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான மசிஹ் அலினெஜாத் பகிர்ந்துள்ளார். 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரு தலைமுறை மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதை இந்த முதியவரின் குரல் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொதுமக்கள் வீதியில் இறங்கி இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டங்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படைகள் தடியடி மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, இணையச் சேவையையும் முடக்கியுள்ளன.

இருப்பினும், இந்த முதியவரின் துணிச்சலான பேச்சு போன்ற காட்சிகள் அடக்குமுறைகளைத் தாண்டி வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன. உயிருக்குத் துணிந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரானிய மக்களின் சுதந்திர வேட்கையை இந்தச் சம்பவம் பறைசாற்றுகிறது.

மனித உரிமைகளுக்காகவும் மாற்றத்திற்காகவும் குரல் கொடுத்து வரும் மசிஹ் அலினெஜாத் போன்றவர்களின் முயற்சியால், ஈரானின் தற்போதைய பதற்றமான சூழல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.