உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், கணவர்களைக் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அஞ்சலி என்ற பெண் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கை அடுத்து, தற்போது காஜல் என்ற பெண் அதே பாணியில் தனது கணவனைத் தீர்த்துக்கட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரோஹ்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரசூல்புர் கிராமத்தைச் சேர்ந்த அனில் என்பவருக்கும், காஜலுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி அனில் காணாமல் போனதாக அவரது சகோதரர் புகார் அளித்த நிலையில், நவம்பர் 5-ஆம் தேதி மீண்டும் வந்து, அனிலின் மனைவி காஜல், அவரது கள்ளக்காதலன் ஆகாஷ் மற்றும் ஆகாஷின் நண்பர் பாதல் ஆகியோர் தான் கொலை செய்ததாகப் புகார் அளித்தார். விசாரணையில், காஜலுக்கும் ஆகாஷுக்கும் இடையே சட்டவிரோத உறவு இருந்தது தெரியவந்தது.

கள்ளக்காதல் உறவுக்குத் தடையாக இருந்த கணவன் அனிலைக் கொலை செய்ய, காஜல் மற்றும் ஆகாஷ் இணைந்து திட்டமிட்டனர். திட்டத்தின்படி, காஜலுக்கு ஆகாஷ் போதை மருந்து கொடுக்க, காஜல் அதை அனிலுக்குக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.

பின்னர், மயக்கமடைந்த அனிலை மூவரும் பைக்கில் ஏற்றிச் சென்று, சிவால் காஸ் கங்கைக் கால்வாய் பாலத்தின் அருகில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு காஜல் தன் துப்பட்டாவால் அனிலின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றார். அனில் இறக்காததால், அரை உயிரோடு அவரைக் கங்கைக் கால்வாயில் வீசிக் கொடூரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

சமீபத்தில் அஞ்சலி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் ராகுலின் மார்பில் 6 குண்டுகள் பாய்ச்சி கொலை செய்த கொடூரத்தை அடுத்து, இந்தச் சம்பவமும் மீரட் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காஜல், ஆகாஷ் மற்றும் பாதல் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.