மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் குஷி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிசர்ப்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நேரில் கண்ட சிலர் கூறியதாவது, குஜராத்தில் இருந்து பேருந்தில் தம்பதியினர் இருவர் கைக்கு குழந்தையுடன் இறங்கினர்.

பின்னர் அவர்கள் சிறிது தூரம் நடந்து வந்து ஒரு பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்தனர். சில நேரம் கழித்து குழந்தையை பாலத்தில் வைத்து விட்டு திடீரென ஆற்றில் குதித்தனர். உடனே அருகில் நின்ற உள்ளூர்வாசிகள் குழந்தையை தூக்கி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக குழந்தை பர்வாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, குழந்தையின் தந்தை அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக செல்வதை காட்டுகிறது. அப்போது பாலத்தின் அருகே குழந்தையும், தாயும் அவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பின்னர் அவர் வந்ததும் குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தண்ணீரில் குதித்துள்ளனர். இது குறித்து அறிந்த மீட்பு படையினர் உடனடியாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்த போது இரவு நேரம் ஆகியதால் சிறிது சிரமம் ஏற்பட்டது. அதனால் மறுநாள் காலை மாநில பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணியில் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

இருப்பினும் தம்பதியர் குறித்து எந்த ஒரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை தவிக்க விட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.