உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில், நெய்நிதால் – ஹல்த்வானி சாலையில் ஒரு பெரும் விபத்தை தவிர்த்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. ஹல்த்வானியில் இருந்து நெய்நிதாலை நோக்கி சென்ற ஒரு டாக்ஸி மீது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய பாறை விழுந்தது.
அந்த பாறை வாகனத்தின் முன்னப்பகுதி மீது விழுந்தது, எனினும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் அற்புதமாக உயிர் தப்பினர். அந்த காட்சிகள் ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது வைரலாகியுள்ளது. வாகனத்தை அருகிலுள்ள மக்கள் உதவியுடன் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தினர். இந்த சம்பவத்தையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நெய்நிதால் மாவட்ட உதவி கலெக்டர் விவேக் ராய், மழைக்காலத்தில் தேவையில்லாத பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே ஹல்த்வானி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பெய்து வரும் மழை காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆறுகள், குன்றுகள் வழியாக வரும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கௌலா, நந்தஹோர் ஆறுகள் அபாய நிலையைத் தாண்டி ஓடுவதால், நதிக்கரைகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வைக்க SDRF மற்றும் காவல்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் செயல்படுகின்றன.
