உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் திருமணம் என்ற புனிதமான உறவின் பெயரால், ஒரு குடும்பம் முழுவதும் மோசடிக்குள்ளான அதிர்ச்சியான சம்பவம், நடந்துள்ளது.
கான்பூரின் பில்ஹவுர் பகுதியில் வசிக்கும் ராமன் குப்தா, இடைத்தரகர்களின் பரிந்துரையின் பேரில் அசாமை சேர்ந்த சோனல் என்பவரை ஆகஸ்ட் 27ம் தேதி மணமகளாக வீட்டில் வரவேற்றார். திருமணம் மிகுந்த விழாக்கோலமாக நடைபெற்றது. ஆனால், அந்த மகிழ்ச்சி வெறும் மூன்று நாட்களிலேயே சோகமாக முடிந்தது.
ஆகஸ்ட் 30ம் தேதி இரவு, திருமணமாகி மூன்றே நாள்களில், சோனல் தனது கணவருக்கு போதை கலந்த பாலை கொடுத்து, அவரை மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர், அவரது அந்தரங்க உறுப்பில் தாக்குதல் நடத்தி படுகாயம் ஏற்படுத்தியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், வீட்டில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி உள்ளார். மறுநாள் காலை, ராமன் குப்தா அறையில் மயக்க நிலையில் கிடந்ததும், மணமகள் சோனல் காணாமல் போனதும் தெரிந்ததும், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே ராமனை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவர் சுயநினைவுக்கு வந்ததும், நடந்ததையெல்லாம் குடும்பத்தினரிடம் கூறினார்.
இதையடுத்து, குடும்பத்தினர் சோனல் மற்றும் திருமணத்தை ஏற்பாடு செய்த இடைத்தரகர்கள் மீது பில்ஹவுர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் பில்ஹவுர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார்.
