ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் காய்கறி சாதம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட 129 மாணவ-மாணவிகளும் வகுப்பறைக்கு சென்று பாடம் கவனித்து விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றனர். அப்போது சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த அந்தியூர் தொகுதி ஏ.ஜி வெங்கடாசலம் எம்.எல்.ஏ மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவ-மாணவிகளை பார்வையிட்டு பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அறிந்த போலீசார் மாணவர்களுக்கு எதனால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.