மும்பை நகரத்தின் நெருக்கடியான லோகல் ரெயில் பயணத்தில் ஒரு அபூர்வமான காட்சி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக பைகள் மற்றும் முட்டைகளை வைக்க அமைக்கப்பட்டிருக்கும் மேல் ரேக்கில், ஒரு பயணி படுத்து தூங்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் கலக்கியுள்ளது. அவரை சுற்றி நிறைந்திருந்த பயணிகள் அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பது போன்ற காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.

அந்த நபர் ரெயிலின் இரும்பு ரேக்கில் தனது கையை தலையணையாக வைத்துக்கொண்டு, எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தார். மற்ற பயணிகள் யாரும் அவரை எழுப்ப நினைக்கவில்லை. இந்த காட்சி பகிரப்பட்டவுடன் நெட்டிசன்கள் பலரும் இந்த காட்சிக்கு பரபரப்பான மற்றும் உணர்ச்சிவயப்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

“இந்த நகரத்தில் ஓர் ஆணுக்குக் கூட ஓய்வெடுக்க இடமில்லை” என ஒருவர் கருத்து பதிவு செய்திருந்தார், “எனக்கு அவருடைய சோர்வு புரிகிறது… தூங்க விடுங்க” என மற்றொருவர் எமோஷனல் ஆக கருத்து தெரிவித்துள்ளார். இந்த படம் ஒருபுறம் நகைச்சுவையாகவும், மறுபுறம் நகர வாழ்க்கையின் அன்றாட சிரமங்களையும் வெளிப்படுத்துகிறது. ரெயில்வே அதிகாரிகள் இதுவரை இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் தரவில்லை என்றாலும், மும்பை லோகல்களில் இதுபோன்ற காட்சிகள் என்பது புதியதல்ல எனும் கருத்தும் கிளம்பியுள்ளது.