கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை ஓசூர் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மல்லிகா என்பவரிடம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அரவிந்த் பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாததால் தீயணைப்பு, போக்குவரத்து, வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் பள்ளிக்கு பொது கட்டிட அனுமதி வேண்டி வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் பொது கட்டிட அனுமதிக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தாசில்தார் கேட்டுள்ளார். இது தொடர்பாக அரவிந்த் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அரவிந்த் தாசில்தார் மற்றும் துணை தாசில்தாரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அவர்கள் அலுவலக உதவியாளர் திம்மராயனிடம் பணத்தை கொடுக்குமாறு தெரிவித்தனர். அதன்படி அரவிந்த் பணத்தை அலுவலக உதவியாளரிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவாஸ்கர், மங்கையர்க்கரசி, திம்மராயன் ஆகிய மூன்று பேரையும் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் கவாஸ்கர் மற்றும் மங்கையர்கரசி ஆகிய இருவரையும் கைது செய்து, திம்மராயனை ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.