மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் சிறு தொகையை சந்தாதாரர்களிடம் மீண்டும் ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பு உள்ள மற்றும் நீண்ட காலமாக எவ்வித பரிமாற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ஏழு லட்சம் கணக்குகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. 36 மாதங்களாக பிஎப் பங்களிப்பு செலுத்தப்படாத கணக்குகள் செயல்பாடற்றவை என கருதப்படும் நிலையில் அத்தகைய கணக்குகளில் உள்ள பணத்தை எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாக திரும்ப வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி தொழிலாளர்கள் தங்களின் பணத்தைப் பெற எந்தவொரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பிஎப் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையும் இனி இருக்காது. சம்பந்தப்பட்ட சந்தாதாரரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிலேயே இந்த சிறு தொகை தானாகவே வரவு வைக்கப்படும்.
ஒருவேளை சந்தாதாரர் உயிரிழந்திருந்தால் அந்தத் தொகை அவர்களின் வாரிசுதாரர்கள் அல்லது நியமிக்கப்பட்ட நாமினிகளின் வங்கி கணக்கிற்கு சென்றடையும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் மூலம் ஏழு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களின் நிலுவைத் தொகையை சிரமமின்றி பெற்றிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
