அமேசான் நிறுவனம் பல்வேறு செயல்பாடுகள்  மூலம் தனது வாடிக்கையாளர்களின் நலன்களை உறுதிசெய்ய ஒரு புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருள்கள் அவர்களது வீடு வரை கொண்டு சேர்க்கப்படும்போது அதன் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வசதி அடங்கியுள்ளது. இப்போது அமேசான் அதன் அட்டைப்பெட்டிகளில் ஒரு வெள்ளை நிறத்தில் உள்ள நான்கு புள்ளிகளை இணைத்து, அட்டைப்பெட்டிகளின் பாதுகாப்பு நிலையை துல்லியமாக கண்காணிக்க புதிய டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளது.

அந்த புள்ளிகள் ஒரு வகை கட்டுப்பாட்டு குறியீடாக செயல்படுகின்றன. சாதாரணமாக, அவை வெள்ளை நிறத்திலேயே இருக்கும், ஆனால் உள்ளே உள்ள பொருட்கள் சீர்குலைவடைந்திருந்தால் அல்லது செயல்பாட்டிற்கு பாதிப்பேற்பட்டால், அந்த புள்ளிகள் சிகப்பு அல்லது பிங்க் நிறமாக மாறும் என நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில் யூடியூபில் ஒரு சோதனையாளரால் பரிசோதிக்கப்பட்டது. அவர் ஒரு பேட்டரி சார்ந்த பொருளை ஆர்டர் செய்து அந்தப் பெட்டியில் உள்ள பாதுகாப்பு புள்ளிகளை சோதித்து பார்த்து அந்த புள்ளி சிகப்பு அல்லது பிங்க் நிறமாக மாறுமா என பரிசோதித்தார். முதல்படியாக, வெள்ளை நிறத்தில் இருந்த புள்ளிகள் எந்த மாற்றமும் காணவில்லை, ஆனால் பொருளின் மேல் அதிக வெப்பநிலை கொண்ட பொருளை வைத்து பரிசோதனை செய்யும்போது, அந்த புள்ளிகள் பிங்க் நிறமாக மாறியதை காண முடிந்தது. இது அட்டைப்பெட்டியில் உள்ள பொருளின் நிலையை வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது என தெரிவித்தார்.

இந்த புதிய டெக்னாலஜியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களின் தரத்தையும் பாதுகாப்பையும் உடனுக்குடன் அறிய முடியும். பேட்டரி போன்ற பொருட்கள் வெப்பமடைந்தால் அந்த பொருள் சேதமடைய கூடும் ஆகையால்  பேட்டரி சார்ந்த பொருட்கள் வெப்பமடைந்திருக்கிறதா இல்லையா என்பதை குறிக்கும் விதமாக இந்த புள்ளிகள் இருப்பதால் எதிர்காலங்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பாதுகாப்பாக வாங்கி கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதாக உள்ளது என வாடிக்கையாளர் தெரிவிக்கின்றனர்.