நாடு முழுவதும் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் எல்லாமே, குறுஞ்செய்தியான OTP-களை பயன்படுத்தி தான் செய்ய முடிகிறது. ஆனால் மற்றொரு புறம், மக்களின் செல்போனுக்கு வரும் OTP பயன்படுத்தி மோசடி கும்பல்கள் பணத்தை திருடுகின்றனர். இந்நிலையில் இதை கட்டுப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை TRAI, புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதாவது இனி மக்களுக்கு சென்றடையும், ஒவ்வொரு OTP-யும் தாமதமாக வரும் என பல்வேறு செய்திகள் வெளியாகின. இதுகுறித்து TRAI விளக்கம் அளித்துள்ளது. மெசேஜ் ட்ரேசிபிலிட்டி என்ற புதிய விதிமுறையை TRAI அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி போலியான குறுஞ்செய்தி அனுப்புவதை தடுக்க அவர்களின் எல்லா செய்திகளையும் ட்ராக் செய்யுமாறு டெலிகாம் நெட்வொர்க் கூறியுள்ளது. மெசேஜ் ட்ரேசிபிலிட்டி என்ற புதிய விதிமுறையில் TRAI-யும் பங்காற்றும் என்று கூறியுள்ளது. இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெசேஜ் ட்ரேசிபிலிட்டி விதிமுறையை டெலிகாம் நெட்வொர்க் நிறுவனம் பின்பற்றும்போது, சரியான நேரத்தில் OTP  பெறுவதில் மக்கள் சிரமம் அடைவார்கள் என்றும், OTP தாமதமாகவே வரும் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் TRAI தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது, மக்களுக்கு வரும் குறுஞ்செய்தியின் உண்மை தன்மையை உணரவே இந்த விதிமுறை என்றும், இதனால் மக்களுக்கு வரும் OTP  தாமதம் ஆகாது என்றும் தெரிவித்துள்ளது.