கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர், பசவபுரா கிராமத்தில் தனது மனைவி லீலாவதி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களது திருமணம் 11 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், தம்பதிக்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக லீலாவதிக்கும், கார் டிரைவர் சந்தோஷ் என்பவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மஞ்சுநாதிற்கு சமீபத்தில் தெரிய வந்ததும், தனது மனைவியை கண்டித்து, அந்தத் தொடர்பை முறித்து விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், லீலாவதி அதை மறுத்துவிட்டு, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி சந்தோஷுடன் வீடு விட்டு ஓடி சென்றார். இதனை தொடர்ந்து மனமுடைந்த மஞ்சுநாத், பன்னரகட்டா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கண்டுபிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்தனர்.

போலீசார், லீலாவதியிடம் சிறப்பாக பேசியும், 3 குழந்தைகள் இருப்பதை நினைத்து கணவருடன் சேர்ந்து வாழ அறிவுரையையும் கூறினார்கள். ஆனால், லீலாவதி தனக்கு குழந்தைகள் வேண்டாம், கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், சந்தோஷுடன் தான் வாழ்க்கையை தொடர விருப்பம் என உறுதியாக தெரிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, தாலியையும் கழற்றி போலீஸ் முன்னிலையில் மஞ்சுநாதிடம் கொடுத்து விட்டு, சந்தோஷுடன் சுதந்திரமாக சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் நடக்க, அருகிலிருந்த 3 குழந்தைகளும் தாய் வேண்டும் என்று கூறி கதறி அழுதனர். பின்னர், மனம் பதறிய மஞ்சுநாத் குழந்தைகளை அழைத்து வீட்டுக்குச் சென்றார். இதற்கிடையே, மனைவி கழற்றி வைத்த புடவையை கையில் பிடித்துக் கொண்டு மனைவியை திரும்பி வரக் கோரியபடி மஞ்சுநாத் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடும்பத்தையே இரைத்து விட்ட இந்த சம்பவம், பலரது மனங்களையும் உருக்கும் வகையில் உள்ளது.