கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு மேக்கரவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான நாகராஜ்(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு அருகே மேக்கரை என்ற குளம் இருக்கிறது. நேற்று முன்தினம் தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து தேங்காய்கள் பறிக்கும் பணி நடைபெற்றது. அப்போது சில தேங்காய்கள் மேக்கரை குளத்திற்குள் விழுந்ததாக தெரிகிறது.

இதனால் நாகராஜ் தண்ணீரில் நீந்தி சென்று தேங்காய்களை ஒவ்வொன்றாக சேகரித்து கரைக்கு கொண்டு வந்தார். இதனை அவரது மகனும், மகளும் கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு தேங்காய் மட்டும் குளத்திற்குள் கிடந்தது. அதனை எடுப்பதற்காக குளத்திற்குள் நாகராஜ் நீந்தி சென்றபோது அவரால் தொடர்ந்து நீந்த இயலவில்லை. அப்போது தண்ணீரில் தனது தந்தை தத்தளிப்பதை பார்த்த மகனும், மகளும் அலறி சத்தம் போட்டனர்.

அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நாகராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற நாகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.