நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பரவக்காடு டேன்டீ குடியிருப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டேன்டீயில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பன்னீர் செல்வம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த சிறுத்தை பன்னீர் செல்வத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்து பன்னீர்செல்வம் அலறி சத்தம் போட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் சிறுத்தை அங்கிருந்து ஓடி சென்றது.

இதனையடுத்து படுகாயமடைந்த பன்னீர் செல்வத்தை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த கீழ் கோத்தகிரி வனச்சரகர் ராம் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் பன்னீர் செல்வத்திற்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.