கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் பயன்படுத்தப்படாத ஆணுறை பேக்கேஜிங்கில் தயாரிக்கப்பட்ட காகிதத் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதில், சலீம் அக்தர் சித்திக் என்ற பயணி, சாண்ட்விச் பரிமாறப்பட்ட தட்டின் பின்புறத்தில் “latex male condoms” என அச்சிடப்பட்டிருப்பதை காட்டி, “பாகிஸ்தானின் நிலையைப் பார்த்து அழ வேண்டும் போலிருக்கிறது” என சோகமுடன் பேசியுள்ளார். ஆனால், இந்த வீடியோ தற்போது வைரலாகி இருந்தாலும், அது தற்போது நடந்ததல்ல என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by truth. (@thetruth.india)

உண்மையை உறுதிப்படுத்திய தகவலின்படி, இந்த வீடியோ 2025ல் வெளியாகவில்லை. இது முதலில் 2023 ஏப்ரல் 13ஆம் தேதி சலீம் அக்தர் சித்திக் என்பவரால் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது.

வீடியோ பரவிய பின்னர், டெய்லி பாகிஸ்தான் செய்தியில், சம்பவம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கராச்சி விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பகுதிகளில் செயல்பட்ட உணவுப் பாயிண்ட்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டன.

மேலும், உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்ட தட்டுகள் தொழில்துறை கழிவுகளில் இருந்த ஆணுறை பேக்கேஜிங் காகிதத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாகவும், அந்த தொழிற்துறை கழிவுகளை மறுபயன்பாடு செய்யும் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட தட்டுகள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்த வகை தட்டுகளின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது உணவு பரிமாற்ற தரநிலைகளில் தீவிர கவனம் தேவை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.