2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் விருப்பமனு வாங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் மாஸ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

ஆரணி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி. கஜேந்திரன், எடப்பாடியார் ஆரணி உள்ளிட்ட 120 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, ஒரே நேரத்தில் விருப்பமனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்காக 120 தொகுதிகளுக்கும் சேர்த்து தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 18 லட்சம் ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி அதிமுக தலைமை அலுவலகத்தையே அதிர வைத்துள்ளார் கஜேந்திரன்.

கடந்த 15-ம் தேதி தொடங்கிய அதிமுக விருப்பமனு வழங்கும் பணியில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற முனைப்பில் தொண்டர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மனுக்களை அளித்து வருகின்றனர்.

இதுவரை எடப்பாடியாருக்காக மட்டும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் கட்சி நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் உற்சாகமாக உள்ள நிலையில், ஒரே நபர் 120 தொகுதிகளுக்குப் பணம் செலுத்தியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.