சென்னையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து பேசி உள்ளனர். திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆவண படுகொலையை தடுக்க அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழ்நாட்டில் சாதி ஆவணப் படுகொலையை தடுக்கும் பொருட்டு தனி சட்டம் இயற்றப்பட கோரி கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன், சண்முகம், திருமாவளவன் ஆகியோர் 3 கட்சிகள் சார்பில் முதலமைச்சரை சந்தித்து சாதி ஆவண கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தோம். அதற்கான தேவையை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம். அதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார் என கூறியுள்ளனர்.
