பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தனது வீட்டு முன்பாகவே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 26 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்ட  நிலையில், அதில் 17 பேர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தற்போது விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் வக்கீல்கள் தரப்பில், குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் விதிப்பது அநியாயமானது என வாதிடப்பட்ட நிலையில், நீதிமன்றம் 17 பேர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பித்தது.

இந்த தீர்ப்பு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் தாக்கத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என சட்ட வட்டாரங்களில் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், குறித்த வழக்கில் மீதமுள்ள நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.