தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பணியாற்றி வரும் சுமார் 35 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக அரசு சார்பில் டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்கள் எந்த மாநிலத்திலிருந்து தமிழகம் வந்துள்ளனர், அவர்கள் எந்த இடத்தில் வசித்து வருகின்றனர், இங்கு வருவதற்கான காரணம் என்ன, அவர்கள் செய்யும் வேலை, இருப்பிட நிபந்தனைகள், வாழ்நிலை, சுகாதார நிலை ஆகிய அனைத்தையும் கணக்கெடுக்கும் பணிக்காக தனித்துறையை நியமிக்க அரசு முனைந்துள்ளது.
இந்த முடிவு தற்போது தொழிலாளர்களை பாதுகாக்கும் முக்கிய முயற்சியாக பாராட்டப்படுகிறது. தொழிலாளர் நலன், குடியிருப்பு, சுகாதார பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத உழைப்பின் தடுப்பு ஆகியவற்றில் இது தமிழக அரசுக்கு துல்லியமான தரவுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொழிலாளர் ஆதார தளம் உருவாக்கப்படுவதால், அவசரகால உதவிகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நேரடியாக பலபேர் பெற வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
