திண்டிவனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை மற்றும் செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகித்து வருகிறது.

இந்த பாதையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக தினசரி பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் கடந்து செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008ன் விதி 5ன் படி ஒவ்வொரு ஆண்டும் பயனர் கட்டணம் திருத்தப்படுவதன் அடிப்படையில், இந்த ஆண்டு சுங்கக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலில் வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய கட்டண நிர்ணயப்படி, கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை பயண கட்டணம் ₹105 ஆகவும், மாதாந்திர கட்டணம் ₹3,100 இருந்து ₹3,170 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் ₹185, மாதாந்திர கட்டணம் ₹5,545 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரக்குகள், பேருந்துகளுக்கு ஒருமுறை பயண கட்டணம் ₹370, இருமுறை பயணிக்க ₹555, மாதாந்திர கட்டணம் ₹11,085 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பல அச்சு வாகனங்களுக்கு ஒருமுறை ₹595, இருமுறை ₹890, மற்றும் மாதாந்திர கட்டணம் ₹17,820 என உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்வுகள் ₹5 முதல் ₹395 வரை அமையவுள்ளன. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் இதனை முன்கூட்டியே கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டியது அவசியமாகும்.