ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சதாவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை பஞ்சாப் மாநில அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து, அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராகவ் சதாவுக்கு, அம்மாநில காவல்துறை சார்பில் உயர்மட்ட பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ (Z+) பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பைக் குறைப்பதாக பஞ்சாப் அரசு அறிவித்தது. கடந்த சில நாட்களாக ராகவ் சதாவுக்கும், ஆம் ஆத்மி கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு பாதுகாப்பை விலக்கிய அடுத்த சில மணிநேரங்களிலேயே, உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், ராகவ் சதாவுக்கு ‘இசட்’ (Z) பிரிவு பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி மற்றும் பஞ்சாப் என இரு மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் வரை, அவருக்கு உடனடி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத தொடக்கத்தில், ராகவ் சதா வகித்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து அவரை ஆம் ஆத்மி தலைமை நீக்கியது. ராகவ் சத்தா சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதில்லை என ஆம் ஆத்மி கட்சித் தலைமை அதிருப்தி வெளியிட்டிருந்தது. ஆம் ஆத்மிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், அக்கட்சியின் அதிருப்தி எம்பி-க்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் ஏற்கனவே கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஓரம் கட்டப்பட்ட ராகவ் சத்தா, தற்போது மாநில அரசின் பாதுகாப்பையும் இழந்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அவர் பாஜகவில் இணையக்கூடும் என்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது.
