சமீப காலமாக, புதியதாக வெளியாகும் திரைப்படங்கள், சில இணைய தளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டு வெளியிடப்படுவதால், பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு திரைப்பட சட்டத்தில் முக்கியமான திருத்தங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தகவல் வழங்கினார்.
அவரது பதிலில், “திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்வதும், இணையதளங்களில் பதிவேற்றுவது உள்ளிட்ட செயல்கள், திரைப்பட சட்டத்தின் 6ஏஏ மற்றும் 6ஏபி பிரிவுகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 3 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அவசர தேவைப்பட்டால், இந்த தண்டனை 3 ஆண்டுகள் சிறை மற்றும் தயாரிப்பு செலவில் 5% வரை அபராதமாக உயர்த்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், திருட்டுத்தனமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு எதிராக மத்திய அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். திரைப்பட சட்டத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட 7(1பி)(ii) பிரிவின் கீழ், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், இனிமேல் எந்த தளமும் சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிட முடியாத வகையில் தடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களுடன், தற்போது திரை உலகம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. ஏனெனில், சினிமா திருட்டால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இது பாதுகாப்பு அமைப்பாக செயல்படும் என நம்பப்படுகின்றது. அரசு நடவடிக்கைக்கு திரைத்துறையினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால், எதிர்காலத்தில் திருட்டு வெளியீடுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
