கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளங்கோடு பகுதியில் தேவகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தேவகுமாரன் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுப்பு தெரிவித்தனர். இதனால் தேவகுமாரன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சிகிச்சைக்காக செலவு செய்த பணம் 4,48,727 ரூபாய், நஷ்ட ஈடு 10000 ரூபாய், வழக்கு செலவு தொகை 2500 ரூபாய் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.