ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் அமேதி மதேரிக்கா பகுதியைச் சேர்ந்த தவுகித் (24) என்பவர் பயணித்தார். அப்போது அவருக்கும், கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இடையே இருக்கைகாக வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு கம்பியால் அவரை தாக்கினர். அதன் பிறகு சரிந்து விழுந்த தவுகித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இறப்புக்கு முன், அவர் தனக்கு நேர்ந்த நிலையை குறித்து தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கூறுகிறார். இதனால் பதறிப்போன அவரது சகோதரர்கள் தாலிப் (20), தவுசிக்(27) ஆகிய இருவரும் நிகல்கர் ரயில்வே நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் வந்ததும் அவர்களையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குற்றவாளிகளை ரயில்வே நிலையத்தில் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.